நான் இந்துவா?

தெளிவான மையமும் அதைச்சார்ந்த அமைப்பும் கொண்டவை இருவகை மதங்கள். ஒன்று யூதமதம்போல இனமதங்கள். யூதம் என்பது ஒரு இனம். அந்த இனத்தவரின் நம்பிக்கையே யூதமதம். அதற்குப் பிற இனத்தவர் மதம் மாறமுடியாது. பல ஆப்ரிக்கக் குறுமதங்கள் இவ்வகைப்பட்டவை. இந்த மதங்கள் தெளிவான எல்லை வரையறை கொண்டவையாக இருக்கும். இனமதங்களின் எல்லை இன அடையாளமே. அதற்கு வெளியே உள்ளவர்கள் அவர்களைப் பொறுத்தவரை அன்னியர் அல்லது பிறர். இனமதங்கள் மதமாற்றம்செய்வதில்லை.

இரண்டாவதாக தீர்க்கதரிசன மதங்கள். அந்த மதங்களை நிறுவிய தீர்க்கதரிசி அந்தமதத்தின் மையத்தையும் எல்லைகளையும் தெளிவாக வரையறைசெய்திருப்பார்.ஆபிரகாமிய மதங்களைப் பொறுத்தவரை ’நானே உண்மையான வழிகாட்டி, பிற எல்லாமே பொய்யனாவை’ என்ற வரியை தீர்க்கதரிசி சொல்லியிருப்பார், அல்லது சொன்னதாக எழுதப்பட்டிருக்கும். கிறிஸ்தவம், இஸ்லாம், மானிகேயன், பகாயி, அகமதியா மதங்களை இவ்வகையில்சேர்க்கலாம். இன்றும் இவ்வகை மதங்கள் தோன்றியபடியே உள்ளன

இன்னொருவகை மதங்களைப் பொதுவாகத் தொகைமதங்கள் எனலாம். இந்துமதமே அதற்கு உலக அளவில் சிறந்த உதாரணம். ஜப்பானிய ஷிண்டோ மதம் சற்றே சிறிய ஒரு உதாரணம். இவை மையமான ஒரு தீர்க்கதரிசனமோ அல்லது மையமான ஒரு தத்துவமோ கொண்டவை அல்ல. இவை ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச்சூழலால் உருவாகி வளர்ந்துகொண்டிருக்கின்றன.